Lead NewsLocal

கோட்டாவைப் பாதுகாப்பது அரசின் கடமையாம்! – தினேஷ் கூறுகின்றார்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் கோட்டாபய ராஜபக்சவைப் பாதுகாப்பது அரசின் கடமை என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

மீண்டும் நாடு திரும்பியுள்ள கோட்டாபய ராஜபக்சவுக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை அரசு வழங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.

கோட்டாபய மீண்டும் அரசியலுக்குள் பிரவேசிப்பதா என்பது தொடர்பில் அவரே முடிவு எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன மேலும் குறிப்பிட்டார்.

மக்களின் மாபெரும் எதிர்ப்புப் போராட்டங்களையடுத்து இலங்கையைவிட்டுத் தப்பியோடி ஜனாதிபதி பதவியை இராஜிநாமா செய்த நிலையில் வெளிநாடுகளில் அடைக்கலம் தேடி அலைந்து திரிந்த கோட்டாபய ராஜபக்‌ச, நேற்று நள்ளிரவு மீண்டும் நாடு திரும்பினார்.

கடந்த ஜூலை 9ஆம் திகதி போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டிருந்த நிலையில், அங்கிருந்து வெளியேறிய கோட்டாபய ராஜபக்‌ச, ஜூலை 13ஆம் திகதி அதிகாலை இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான விமானத்தில் மாலைதீவு சென்றிருந்தார்.

ஜூலை 14 ஆம் திகதி மாலை மாலைதீவிலிருந்து சிங்கப்பூர் சென்றிருந்த அவர், அன்றிரவு ஜனாதிபதி பதவியை இராஜிநாமா செய்திருந்தார்.

28 நாட்கள் சிங்கப்பூரில் தங்கியிருந்த கோட்டாபய, ஆகஸ்ட் 11ஆம் திகதி தாய்லாந்துக்குப் பயணமாகியிருந்தார்.

மூன்று வாரங்களாகத் தாய்லாந்தில் தங்கியிருந்த கோட்டாபயவின் பாதுகாப்பை இலங்கை அரசு உறுதி செய்ததை அடுத்து அவர் மீண்டும் நாடு திரும்பினார்.

தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் வழியாக அவர் நாட்டை வந்தடைந்தார்.

சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானமான SU 468 இல் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று நள்ளிரவு 11.48 மணியளவில் அவர் வந்து இறங்கினார்.

ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் சிலர் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்று கோட்டாபயவை வரவேற்றனர்.

அதன்பின்னர் அவர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அரசால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உத்தியோகபூர்வ இல்லத்தைச் சென்றடைந்தார்.

சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், மனித உரிமை மீறல்களுக்காக கோட்டாபய மீது வழக்குத் தொடரக் காத்திருக்கின்ற நிலையில், அவர் நாடாளுமன்ற உறுப்பினரானால் அந்த வழக்குகளில் இருந்தும், சில தனி நபர்களிடமிருந்தும் தப்பிக்கலாம் என்ற நோக்குடன் அவரைத் தேசியப்பட்டியல் ஊடாக அரசியலுக்குள் கொண்டுவர ‘மொட்டு’க் கட்சியினர் வியூகம் வகுத்து வருகின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

– அரியகுமார் யசீகரன்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading