LocalSports

9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா அபார வெற்றி!! – இலங்கை படுதோல்வி

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக திமுத் கருணாரத்ன மற்றும் குசல் பெரேரா ஆகியோர் களமிறங்கினர்.

இதில் ஆட்டத்தின் முதல் பந்திலேயே திமுத் கருணாரத்ன ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அடுத்து ஜோடி சேர்ந்த அவிஷ்கா பெர்னாண்டோ மற்றும் குசல் பெரேரா பொறுப்புடன் ஆடி அணியை சற்று சரிவிலிருந்து மீட்டனர். இதில் அவிஷ்கா பெர்னாண்டோ மற்றும் குசல் பெரேரா தலா 30 ஓட்டங்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அதற்குப் பின் களமிறங்கிய மெத்யூஸ் 11 ஓட்டங்களிலும், குசல் மெண்டிஸ் 23 ஓட்டங்களிலும், தனஞ்ஜெயா டி சில்வா 24 ஓட்டங்களிலும், ஜீவன் மெண்டிஸ் 18 ஓட்டங்களிலும், திசரா பெரேரா 21 ஓட்டங்களிலும், உதனா 17 ஓட்டங்களிலும், மலிங்கா 4 ஓட்டங்களிலும் என அடுத்தடுத்து சீரான இடைவெளியில் தங்களது விக்கெட்டுக்களை இழந்து வெளியேறினர்.

இறுதியில் இலங்கை அணி 49.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 203 ஓட்டங்களை எடுத்தது. கடைசியில் லக்மல் 5 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.

தென்னாபிரிக்க அணியில் பிரிட்டோரியஸ் மற்றும் கிறிஸ் மோரிஸ் தலா 3 விக்கெட்டுக்களும், ரபடா 2 விக்கெட்டுக்களும், டுமினி மற்றும் பெலக்வாயோ ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து, 204 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாபிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக குயின்டான் டி காக் மற்றும் அம்லா களமிறங்கினர். இதில் குயின்டான் டி காக் 15 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டு பிளிஸ்சிஸ், அம்லா உடன் கைகோர்க்க அணியின் ஸ்கோர் சீராக உயர்ந்தது. பொறுப்புடன் ஆடிய இவ்விரு வீரர்களும் தங்களது அரைசதத்தைப் பதிவு செய்து அசத்தினர்.

இறுதியில் தென்னாபிரிக்க அணி 37.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து (206 ஓட்டங்கள்) இலக்கை எட்டியது. கடைசியில் அம்லா 80 ஓட்டங்களுடனும், டு பிளிஸ்சிஸ் 96 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இலங்கை அணியில் மலிங்கா ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading